சுசீந்திரம் கோயிலில் கவர்னர் சாமி தரிசனம்: சிற்ப வேலைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்
சுசீந்திரம்: சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் சுவாமி கோயிலில் இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரிக்கு நேற்று வந்தார். அதைத்தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் கவர்னர் ஓய்வு எடுத்தார். அப்போது சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசியதாக தெரிகிறது. இதையடுத்து இன்று காலை 8.30 மணி அளவில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் காரில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு சென்றார். அப்போது அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் கோயிலில் தட்சிணாமூர்த்தி, தாணுமாலயன் சுவாமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயிலை சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள சிற்ப வேலைபாடுகள், இசை கல்தூண்கள் குறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து சிறிது நேரத்துக்கு பின்னர் கவர்னர் காரில் மீண்டும் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். கவர்னர் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.