ஆளுநருக்கு எதிராக மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் துணைவேந்தர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசுக்கும், ஆளுநர் சி.வி.ஆனந்த போசுக்கும் இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வந்தது. துணைவேந்தர்கள் நியமனத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதம் செய்வதாகக் கூறி மேற்குவங்க அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும் இந்த பிரச்சனையை தீர்க்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யு.யு.லலித் தலைமையில் தேர்வு குழு அமைப்பக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் , ‘‘மேற்கு வங்க அரசு மற்றும் ஆளுநர் ஆகிய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட எட்டு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேர்வுக் குழு பரிந்துரைத்த பெயர்களுக்கு, ஆளுநர் மற்றும் மாநில அரசு ஆகிய இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடிப்படையாக கொண்டு இந்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது. கருத்து வேறுபாடு நிலவும் மற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து, பின்னர் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.