அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆடிட்டர் குருமூர்த்தியின் பதிவுக்கு அமைச்சர் பதிலடி
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கையை விட இந்தி பிரச்சார சபாவில் அதிகம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். தமிகத்தில் 1ம் வகுப்பில் சேர்ந்துள்ள தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கையை விட, இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 2025-26ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பில் தமிழ்வழி கல்வியில் 70 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், இந்தி பிரச்சார சபாவில் 80 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று இதற்கு பதிலளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆடிட்டர் தெரிவித்துள்ள தகவல் தவறானது. 2025-26ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 769 பேர் சேர்ந்துள்ளனர். 70 ஆயிரம் அல்ல. ஆடிட்டர் குருமூர்த்தி பகிர்ந்து தகவல் தவறானது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.