ரூ.1,800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கினார் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் மகன் மீது முறைகேடு புகார்: விசாரணை நடத்த முதல்வர் பட்நவிஸ் உத்தரவு
மும்பை: துணை முதல்வர் அஜித்பவாரின் மகன் பார்த் பவாருடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்று, சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு புனேவில் ஒரு நிலத்தை வாங்கி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதில் விசாரணை நடத்த முதல்வர் பட்நவிஸ் உத்தரவிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான அஜித்பவாரின் மூத்த மகன் பார்த் பவார். இவர் பங்குதாரராக உள்ள அமேதியா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், புனேவின் முந்த்வா பகுதியில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கி உள்ளது. நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான திக்விஜய் பாட்டீலின் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வாங்கிய நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1,800 கோடி என்று கூறப்படுகிறது. அந்த நிலத்திற்கான முத்திரைத்தாள் வரி ரூ.21 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்க முடியாது. அதை மீறி, பார்த் பவாருடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு விற்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. சமூக ஆர்வலரான விஜய் கும்பர் இந்த தகவலை வெளியிட்ட நிலையில், இது குறித்து வருவாய்த்துறை அமைச்சரிடம் சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையாகி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நில ஒப்பந்த சட்டத்தை மீறி நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென மூத்த காங்கிரஸ் தலைவர் விஜய் வட்டேத்திவார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் பட்நவிஸ் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா அரசின் வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விசாரணையால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என உத்தவ் விமர்சித்துள்ளார். இதனிடையே இந்த நில ஒப்பந்தம் தொடர்பாக புனேவைச் சேர்ந்த தாசில்தார் சூர்யகாந்த் யேவாலே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.