மக்களின் ஏகோபித்த ஆதரவு உள்ளதால் மீண்டும் ஆட்சி அமைப்போம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
சென்னை: வில்லிவாக்கம் பாடி மேம்பாலத்தின் கீழ் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்து, கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாடி மேம்பாலம் அருகே ரூ.53 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன மீன் அங்காடியில் 188 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பயன்பெறும் வகையில் மீன் அங்காடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மீன் அங்காடியை வரும் 20ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திருசெந்தூரில் கந்த சஷ்டி பெருவிழா முன்னேற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. வடசென்னை பகுதிகளில் 80 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ஏகோபித்த ஆதரவோடு முதல்வர் நிச்சயம் ஆட்சியில் அமருவார். கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் உள்ளார்கள் என பாஜ தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறுகிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கின்ற ஆணையம் தேர்தல் ஆணையம். அவ்வாறு இருந்தால் சொல்லி நீக்க சொல்லட்டும். யார் வேண்டாம் என்று தடுத்தது. ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி கொண்டிருக்கிறார்கள். மக்களின் ஏகோபித்த ஆதரவு உள்ளதால், நேர்மையாக தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்போம் என கூறியவர் முதல்வர். போலி வாக்காளர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.