அரசு பள்ளியில் பாலியல் சீண்டல் புகார் மாணவ, மாணவிகளிடம் 7 மணி நேரம் விசாரணை: ‘இனி தவறாக நடக்க மாட்டார்கள்’ வீடியோ வெளியிட்ட பெண் பேட்டி
கிணத்துக்கடவு: அரசு பள்ளியில் பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் மாணவ, மாணவிகளிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் சீண்டல் குறித்து, மாணவிகள் வெளியிட்ட ஆடியோ, வீடியோவில்,“மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும்போது, பல இடங்களில், கை வைத்து, தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் இசை ஆசிரியர், மாணவிகளை உற்சாகப்படுத்துகிறேன் என்கிற பெயரில் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக்கூறி உள்ளனர்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்பேரில், கூடுதல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூர் சரக டிஎஸ்பி. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் பேரூர், கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.
ஆடியோ, வீடியோ வெளியிட்ட மாணவிகள் பள்ளிக்கு வராத நிலையில், 9, 10, 11, 12ம் வகுப்பு படிக்கும் சுமார் 1300 மாணவ, மாணவிகளிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அப்போது, மாணவ மாணவிகள், பாலியல் சீண்டல் இல்லை, ஆசிரியர்கள் நன்றாக நடத்துகிறார்கள் எனக்கூறியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என ஒரு மாணவியின் தாயார் பேட்டியளித்தார்.
இதனைத்தொடர்ந்து, போத்தனூரில் உள்ள பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், விசாரணைக்கு வருமாறு அந்த பெண்ணுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதை ஏற்று, அந்த பெண் நேற்று போத்தனூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பின்னர் அந்த பெண், நிருபர்களிடம் கூறுகையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே வீடியோ வெளியிட்டோம்.
இதுதொடர்பாக புகார் அளித்த நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என பேட்டி அளித்தேன். தற்போது போலீஸ் விசாரணைக்கு பிறகு அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. இனி அந்த பள்ளியில் பெண் குழந்தைகள் மீது தவறான கண்ணோட்டத்தில் யாரும் நடந்துகொள்ள மாட்டார்கள். எனது நோக்கம் வெற்றி அடைந்து விட்டது என்று கூறினார்.