அரசு திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை: வழக்குத் தொடர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம், உச்ச நீதிமன்றம் அதிரடி
புதுடெல்லி: தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தலைவர்களின் படங்கள் மற்றும் பெயர்கள் இடம்பெற தடையில்லை என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்த அதிமுக எம்பி சி.வி.சண்முகத்திற்கு ரூ.10லட்சம் அபராதம் விதித்ததோடு, உயர்நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்தது. தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரங்களில், முன்னாள் முதல்வர் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருத்தார். இதையடுத்து மேற்கண்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,\\” உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. மேலும் அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது. எனவே, தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர்களின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது.
இருப்பினும் அரசு நலத்திட்டம் தொடங்குவதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக திமுக கட்சி தரப்பிலும், அதேப்போன்று தமிழ்நாடு அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் கே.விநோத் சந்திரன், என்.வி.அஞ்சரியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் பி.வில்சன் ஆகியோரும், அதேப்போன்று தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் ஹரீஷ் ஆகியோர் ஆஜராகி வைத்த வாதத்தில்,\\\\”தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள அரசின் திட்டங்களை ஒரு மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் இந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதியது கிடையாது. ஏற்கனவே இருக்கும் அரசின் பல்வேறு திட்டங்களை கீழ் மக்கள் பலன் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நீங்கள் கொண்டு வந்த எத்தனை திட்டங்களுக்கு ஒரே ஒரு நபரின் பெயரை வைத்திருக்கிறீர்கள் என கேள்வியெழுப்பினார். அதற்கு அதிமுக தரப்பு வழக்கறிஞர், ஒன்று கூட இல்லை என்று பதிலளித்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்,\\\\” இந்த விவகாரத்தில் அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலேயே பொய் சொல்கிறார்கள். 22 திட்டங்களுக்கு மேல் அவர்கள் ஒரே ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள். அதை எங்களால் இப்பொழுதே பட்டியலிட முடியும். அம்மா என்ற ஒரே பெயரில் தான் இவர்கள் பெரும்பாலான திட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டு வந்தார்கள்.
அதாவது அம்மா என்றால் அது ஜெயலலிதா தான் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி என அதிமுக கட்சித் தலைவர்களை அவர்கள் அழைக்கும் பெயரில் தான் அரசின் திட்டங்களுக்கு வைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு கூட அவர்கள் இப்படி சில சமயம் பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு மற்றும் திமுக தரப்பில் செயல்படுத்தி வருகிறது.
அது மக்களுக்கு செல்லக் கூடாது என்பதற்காகத்தான் அரசியல் உள்நோக்கத்துடன் அதிமுக இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்து, அரசின் விளம்பரங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்து, எங்கும் விதிமுறை மீறல் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் ஒரு திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக பிரதமர், முதல்வர் ஆகியோரது பெயர் மற்றும் படங்களை காலம் காலமாக பயன்படுத்தி தான் வருகிறார்கள். ஏன் கவர்னர் படங்கள் கூட சில சமயம் இடம்பெற்று இருக்கிறது.
இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் புகைப்படங்கள் கூட இவ்வாறு இடம்பெறலாம். அதில் எந்தவித சட்டவிதி மீறல்களும் கிடையாது. அப்படி இருக்கும் போது பெயரை மட்டும் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த விதத்தில் நியாயமாகும். மேலும் தற்போது இந்த மனுவை தாக்கல் செய்திருக்கக் கூடிய நபர் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். ஆனால் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் 22 அரசு திட்டங்களுக்கு ஒரே நபரை பெயரை அறிவித்தபோது மனுதாரர் மாநில அமைச்சராக இருந்திருக்கிறார் என்று தெரிவித்தனர்.
மேற்கண்ட வாதங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக சி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், \\” அம்மா என்பது யாருடைய தனிப்பட்ட நபர்களின் பெயர் கிடையாது. அது ஒரு பொதுவான பெயர் ஆகும் என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, நீங்கள் கூறுவது உண்மை தான், ஏனெனில் அம்மா என்றால் தாய் என்று பொருள், அதனால் தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அம்மாவாக இருக்கலாம் என சிரித்துக் கொண்டே கூறினார். இதையடுத்து அதிமுக வழக்கறிஞர், ‘‘அதாவது எங்களது முக்கிய கோரிக்கை என்னவென்றால், வாழும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது.
இதுகுறித்து முன்னதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி,‘‘வாழும் அரசியல் தலைவரின் பெயரை அரசு விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதா?. எங்கே அதனை எங்களிடம் காட்டுங்கள். நாங்கள் அதனை பரிசீலனை செய்கிறோம் என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அதிமுக வழக்கறிஞர்,‘‘கட்சியின் கொள்கை தலைவர்கள், அவர்களது புகைப்படங்கள் உள்ளிட்டவை அரசின் திட்டங்களில் எந்த வகையிலும் இடம்பெறக்கூடாது என்பது உச்ச நீதிமன்றம் பல வழக்குகளின் தீர்ப்பாக தெரிவித்திருக்கிறது என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கக்கூடிய ரிட் மனுக்களை நாங்கள் ரத்து செய்கிறோம். குறிப்பாக பொது மக்களின் வரிப்பணத்தில் குறிப்பிட்ட கட்சித் தலைவரின் பெயர் வைக்கப்படுவது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால், அப்படி உள்ள அனைத்து திட்டங்களையும் தான் மனுதாரர் எதிர்த்திருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு திட்டத்தை மட்டும் அவர் எதிர்ப்பது என்பது தான் இங்கு கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றது.
மேலும் உங்களுக்கான அரசியல் சண்டை- விளையாட்டுக்கெல்லாம் நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டாம். குறிப்பாக இதற்கு முன்பாக இப்படி ஒரு குறிப்பிட்ட தலைவரின் பெயர் வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியலை எங்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஆனால் நாகரீகம் கருதி அந்தப் பெயர்களை நாங்கள் படிக்கவில்லை என தெரிவித்த தலைமை நீதிபதி, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், தலைவர்களின் படங்களை பயன்படுத்த தடையில்லை. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ரிட் மனுவை தாக்கல் செய்திருந்த சி.வி.சண்முகத்திற்கு ரூ.10லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று அதிரடி உத்தரவிட்டனர்.
* வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: திமுக எம்பி பி.வில்சன்
உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இது 2026 திமுகவின் வெற்றிக்கு இது தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்க செய்துள்ளது என்பது கண்டிக்கத்தக்கதாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகத்தை பொறுத்தவரை , ‘‘அம்மா” என்ற பெயரில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம்.புகைப்படங்களுடன் இந்த திட்டங்களும் செயல் படுத்தப்பட்டன இருப்பினும் திமுக சார்பில் இதற்கு எந்த எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை குறிப்பாக குஜராத் மகாராஷ்டிரா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களுடன் மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம் , என தெரிவித்தார்.
* அவமதிப்பு வழக்கு பாயும் சி.வி.சண்முகத்திற்கு எச்சரிக்கை
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிராக ரிட் வழக்கு தொடர்ந்த அதிமுக எம்பி சி.வி.சண்முகத்திற்கு ரூ.10லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம், அந்த தொகையை அடுத்த ஒரு வாரத்திற்குள் மாநில அரசிடம் செலுத்த வேண்டும். இதைத்தொடர்ந்து மக்களுக்கான திட்டங்களுக்கு அரசு அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேலை தொகையை செலுத்த தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
* இதற்கு முன்பாக இப்படி ஒரு குறிப்பிட்ட தலைவரின் பெயர் வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியலை எங்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஆனால் நாகரீகம் கருதி அந்தப் பெயர்களை நாங்கள் படிக்கவில்லை.