அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் இந்தோனேசிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைப்பு: 3 பேர் பலி; 5 பேர் படுகாயம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் அரசாங்க எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை தீ வைத்து கொளுத்தினர். இதில் 3 பேர் பலியாகினர். இந்தோனேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 580 பேருக்கும் மாத ஊதியத்துடன், கூடுதலாக வீட்டு வசதிக்காக தனியாக 3 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் ஜகார்த்தா உள்பட பல முக்கிய நகரங்களில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆடம்பர வீட்டு செலவுத்தொகை ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
கடந்த 25ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டாக்சி ஓட்டுநர் அபான் குர்னியாவன்(21) என்ற இளைஞர் மீது காவல்துறையின் கனரக வாகனம் ஏற்றி, அவர் கொல்லப்படும் காணொலி இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தெற்கு சுலவேசி மாகாண தலைநகர் மக்கசாரில் உள்ள பிராந்திய நாடாளுமன்றத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை தீயிட்டு எரித்தனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தீயிலிருந்து தப்பிப்பதற்காக நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து குதித்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் காரணமாக இந்தோனேசியாவில் வசிக்கும் அமெரிக்க, ஆஸ்திரேலியா, தெற்காசிய நாடுகளின் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அந்தந்த நாட்டு தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.