அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: அன்புமணி கோரிக்கை
சென்னை: அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 15 கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளது. அந்த கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 1.26 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.
அவற்றுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த மே 7ம் நாள் தொடங்கின. ஜூன் மாதமே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், மாணவர் சேர்க்கை இடங்கள் நிரம்பாமல் இருந்ததால் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட இதுவரை 96 ஆயிரம், அதாவது 76.2% இடங்கள் மட்டும் தான் நிரம்பியுள்ளன.
மீதமுள்ள மாணவர்கள் அனைவரும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விட்டதால் அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 30 ஆயிரம் இடங்கள் நிரம்புவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை. அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் வலிமையாக இல்லாவிட்டால், தமிழகத்தின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் வேகமாக குறையும். தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டுமானால், உயர்கல்வி மீது அக்கறை கொண்ட அரசை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.