அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை, பெண்கள் ஒருவர் கூட இல்லை : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்
மதுரை : அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "அரசு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்களில் எத்தனை பேர் பட்டியல் சாதி, பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் என்ற கேள்வியை (எண். 2469/04.08.2025) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரிடம் எழுப்பி இருந்தேன். அதற்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி அளித்துள்ள பதில் பேரதிர்ச்சியை தருகிறது.
*பிரதிநிதித்துவம் பாதாளத்தில்*
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தமுள்ள 9 தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்களில் ஒருவர் கூட பட்டியல் சாதியை சேர்ந்தவர் இல்லை. பழங்குடியினர் இல்லை. பெண்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் இயக்குநரவை குறித்து தரப்பட்டுள்ள விவரங்களும் இப்படித்தான் உள்ளது. மொத்தமுள்ள 98 இயக்குநர்களில் பட்டியல் சாதிகளை சேர்ந்தவர்கள் 6 பேர். பழங்குடியினர், சிறுபான்மையினர் தலா ஒருவர். பெண்கள் எண்ணிக்கை 12 பேர். மக்கள் தொகை சதவீதத்திற்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்தான்.
எல்.ஐ.சியின் இயக்குனரவையில் மொத்தமுள்ள 13 பேரில் பட்டியல் சாதியினர், சிறுபான்மையினர் எவருமே இல்லை. ஒரே ஒருவர் பழங்குடியினர். ஒரே ஒரு பெண். எல்.ஐ.சியின் தலைவர் பொறுப்பில் உள்ளவரும் மேற்கண்ட பிரிவினைச் சேர்ந்தவர் இல்லை.
அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இயக்குனரவையில் மொத்தமுள்ள 48 பேரில் பட்டியல் சாதியினர் 5 பேர் மட்டுமே. சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 18 பேர் பெண்கள்.
அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் 6 பேரில் பட்டியல் சாதியினர் ஒருவர். சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 3 பேர் பெண்கள்.
*சாதிய பாரபட்சம்*
"அமைச்சரின் பதில் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. சாதி பாகுபாடுகளின் வெளிப்பாடே. இட ஒதுக்கீடு இல்லாத பதவிகளில் எந்த அளவுக்கு பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது சாட்சியம். அரசு நிறுவனங்களின் கதியே இதுவென்றால் தனியார் நிறுவனங்களில் எல்லாம் என்ன நிலைமை இருக்கும்!" என்று கருத்து தெரிவித்துள்ளார்.