அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள்: உயர்கல்வித் துறை தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் 181 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 அரசுக் கல்வியியல் கல்லூரிகள், 162 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் 1,233 தனியார் கல்லூரிகள் உள்ளன. அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான உதவி பேராசிரியர்களும் 7,000க்கும் அதிகமாக கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த நான்கரை ஆண்டுகளில் 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இந்த கல்வி ஆண்டு மட்டும் பதினாறு புதிய கல்லூரிகளை அறிவித்து தொடங்கியதுடன் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒப்புதல் அளித்து சேர்க்கை பெற்றுள்ளனர். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் அந்தந்த பகுதியில் உள்ள தொழில் முறைக்கு ஏற்ற பல்வேறு புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி கற்கும் திறன் எவ்வகையிலும் பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 708 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்ப தற்போது முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேற்படி உதவி பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.