அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் பாலின உளவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை: பாலின உளவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். சென்னை நந்தனம் அரசு கலை கல்லூரியில் “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழு” நேற்று தொடங்கப்பட்டது. இக்குழுவை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: மாணவர்கள் கல்வி பயிலும் இடங்கள் உரிய புரிதலுடன் பாலின பாகுபாடின்றி செயல்பட ஏதுவாக “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு” உயர்கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது நந்தனம் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவின் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இக்குழு அமைக்கப்படும்.
உளவியலாளர்கள், சமூகவியல் அறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், பெண்ணுரிமை வல்லுநர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரின் வழிகாட்டுதலுடன் இக்குழுக்கள் மாணவ-மாணவிகளுக்கு தேவையான புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். மேலும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே உறவை வலுப்படுத்தவும் உதவும். கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு அவர் பேசினார்.