அரசு பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை: உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணி குறித்து கேட்டறிந்தார்
இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலக பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் அரசு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
குறிப்பாக, கடந்த 15ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன, பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா போன்ற விவரங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் அறிவுரை வழங்கினார்.
அதேபோல், பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக்கூடாது’
மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளை தொடர்கிறேன்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்று வரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களை தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.