அரசுப் பள்ளியாக மாற்ற 8 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்: நிர்வாகமே இல்லாமல் செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கிராமத்தில் நிர்வாகமே இல்லாமல் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற 8 ஆண்டுகளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர் அருகே உள்ள பெரிய தம்பி உடையான்பட்டி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 1957ஆம் ஆண்டு கிராம மக்கள் ஒன்றிணைந்து தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கினர். பின்னர் அந்த பள்ளி 1985ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்த தேவாலய பங்கு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து பங்கு தந்தை சிறுபான்மையினர் பள்ளியாக மாற்ற முயற்சி செய்த நேரத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அதன் பின்னர் பள்ளியை நிர்வகிக்க யாரும் இல்லாமல் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியாகவே செயல்பட்டு வந்தது. தற்போது வரை நிர்வாகம் இல்லாமல் செயல்பட்டு வரும் அந்த பள்ளியில் அரசு ஊதியத்தில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பலமுறை கோரிக்கை வைத்த நிலையில் பள்ளிக்கென தனியாக இடத்தை கொடுக்க கல்வித்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
அதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு கிராம மக்கள் சார்பில் பள்ளிக்கு தேவையான இடத்தை ஆவணமாக பதிவுசெய்து வழங்கப்பட்டது. தொடக்கக்கல்வி முறையாக கிடைக்காததால் தங்கள் கிராமத்தில் உள்ள யாரும் அரசு பணியில் இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். முறையான தொடக்கக்கல்வியை வழங்க சம்மந்தப்பட்ட பள்ளியை அரசு பள்ளியாக மாற்றி பள்ளிக்கு தேவையான கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசும் மாவட்ட நிர்வாகமும் செய்துதர வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.