அரசு இடத்தை காலி செய்ய எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு உத்தரவு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை!
மதுரை: 30 ஆண்டு குத்தகை முடிந்ததால் அரசு நிலத்தில் இருந்து திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலை காலிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி காஜாமலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.3 ஏக்கர் நிலத்தில் எஸ்.ஆர்.எம். ஓட்டல் உள்ளது. 1994ல் 30 ஆண்டு குத்தகைக்கு பெற்ற நிலத்தில் எஸ்.ஆர்.எம்.ஓட்டல் கட்டப்பட்டிருந்தது. 30 ஆண்டு குத்தகை முடிந்ததை அடுத்து இடத்தை காலிசெய்யுமாறு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸை ரத்துசெய்யக் கோரி எஸ்.ஆர்.எம். ஓட்டல் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அதில், குத்தகை காலத்தை நீட்டிக்கக் கோரிய எஸ்.ஆர்.எம். ஓட்டலின் மனுவை அரசு நிராகரித்ததை தனி நீதிபதி ரத்து செய்தார்.
இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து கடந்த வருடம் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா, பூர்ணிமா அமர்வு விசாரணை செய்து வந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது; அரசு நிலத்தில் இருந்து திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டல் குத்தகையை நீட்டித்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. மேலும், குத்தகை உரிமம் முடிந்த பிறகு அதை நீட்டிப்பதை உரிமையாக கோர முடியாது. எஸ்.ஆர்.எம். விடுதியின் குத்தகையை நீட்டிப்பது முழுக்க முழுக்க அரசின் முடிவு சம்பந்தப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பற்றிய நீதிபதி சுவாமிநாதனின் கருத்துகளை நீக்க தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்ததை அடுத்து, தமிழக சுற்றுலாத்துறை பற்றி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழக சுற்றுலாத்துறை ஓட்டல் நடத்துவது பற்றி நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்த கருத்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக சுற்றுலாத்துறை 1971 முதல் பல்வேறு இடங்களில் ஓட்டல்களை நடத்தி வருகின்றது. தமிழக சுற்றுலாத்துறை ஓட்டல் நடத்தி, 2023-24ம் ஆண்டில் ரூ.32.33 ரூ.கோடி வருமானம் ஈட்டியுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டதால் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் விடுதியை காலி செய்ய வேண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.