அரசு அலுவலகங்கள் இரவில் மர்ம நபர்களால் உடைப்பு
*கடத்தலுக்கு பயன்படுத்த திட்டம்
*பணியாற்ற அலுவலர்கள் அச்சம்
*கலெக்டர் நடவடிக்கை வேண்டும்
மண்டபம் : மண்டபம் அருகே ஊராட்சி அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களை சூறையாடி சேதப்படுத்தும் மர்ம நபர்களால் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சி தென்கடலோர பகுதி அருகே அமைந்துள்ளது. ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக நூலகம் மற்றும் அங்கன்வாடி பள்ளிக்கூடம், அரசு பள்ளிக்கூடம் மற்றும் ஊராட்சி அலுவலகம், கிராமசபை இ.சேவை மையம், ரேஷன் கடை உள்பட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளது.
இந்நிலையில் இந்த அரசு அலுவலகங்களை சமீப காலமாக மர்ம நபர்கள் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருள்களை சேதப்படுத்துவது போன்ற குற்றச்செயல்களை செய்து செய்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தென்கடலோர பகுதியில் சாலையின் அருகே சிறிய குழந்தைகள் படிக்க புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு திறக்கும் நிலையில் உள்ளது.
அந்த கட்டிடத்தின் பூட்டுகளை கடந்த 3ம் தேதி இரவு மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அதுபோல அருகே இருந்த ஊராட்சி அலுவலகத்திற்கு உட்புறமாக தீப்பற்றக் கூடிய பட்டாசுகளை மர்ம நபர்கள் வெடித்துள்ளனர்.
இந்த வெடியின் தாக்கத்தில் அரசு அலுவலகத்தில் உள்ள பொருட்களை தீவைத்து எரிக்கவும் மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த செயல்களை செய்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அலுவலகத்திற்கு எந்த சேதமும் இல்லாமல் ஆவணங்கள் காக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஊராட்சி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.அதுபோல கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி நூலக கட்டிடத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த ரேக்குகளை தள்ளி விட்டு, மேஜைகள் போன்ற பொருள்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்தும் ஊராட்சி நிர்வாகம், மண்டபம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளது.
இப்பகுதியில் தொடர்ந்து மர்ம நபர்களின் சூறையாடும் செயல்களால் பொதுமக்கள் பதட்டத்தில் உள்ளனர். காவல்துறை அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்தி தீவிர நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களும், ஊராட்சி நிர்வாக அலுவலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் மர்ம நபர்களின் அலுவலக சூறையாடல் சம்பவத்தால், அரசு அலுவலகங்களில் பணியாற்ற வெளியூர்களில் இருந்து வருவோர் அச்சமடைந்துள்ளனர். மேலும் மரைக்காயர்பட்டிணம் கிராமம் தென் கடலோரப் பகுதியில் இருந்து பல மாதங்களாக, கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், கடல் அட்டைகள், பீடி இலைகள் கடத்தப்படுகிறது. இந்த குற்றச்செயல்களை தடுப்பதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியில் கடலோரம் அருகேயுள்ள வேதாளை கிராமத்திற்கு செல்லும் குறுக்கு பகுதியாக செல்ல தார்ச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இலகுவாக ராமேஸ்வரம், ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்களில் கடத்தல் பொருட்களை கொண்டு வந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்கு வசதியாக அமைந்துள்ளது.
இந்த கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் பொருள்களை வைத்து பயன்படுத்த கடத்தல் காரர்கள் திட்டமிடுகிறார்களோ என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல இந்த கடலோரப் பகுதியில் அருகே உள்ள அரசு அலுவலகங்களில் பகல் முழுவதும் அரசு அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் படிப்புக்கு குழந்தைகள், பொதுமக்கள் வருவதால் கடத்தல்காரர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனால் அரசு அலுவலகங்களை சூறையாடி அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.
அதுபோல அரசு அலுவலகங்களில் கடத்தல் பொருட்களை வைத்திருந்தால், காவல் துறைகளுக்கு சந்தேகம் வராது. தீவிரமாக அரசு அலுவலகங்களை திறந்து பார்ப்பதற்கு சட்டப்படி தவறாகி விடும். இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் கடத்தல் பொருட்களை வைப்பதற்கு இந்த புதிய அலுவலகங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் பேசி மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. அதனால் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை சூறையாடும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு அலுவலகங்களை சூறையாடும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியில் அமைந்துள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரைக்காயர்பட்டிணம் கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மர்ம நபர்களின் சூறையாடும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்பி ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கும், அரசு அலுவலர்கள் அச்சம் இல்லாமல் இந்த பகுதியில் பணியாற்றி வருவதற்கும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியில் மர்ம நபர்களின் அட்டூழியத்தை ஒழிப்பதற்கு இந்த பகுதியில் இரவு நேரம் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணி இருக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.