அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிட முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டு, அவ்விடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. இதில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
அதன்படி, 21.07.2025 அன்று கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிக பணியமர்த்துதலுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தகுதியானவர்களுக்கு 18.08.2025 அன்று முதல் 28.08.2025 வரை அந்தந்த மண்டலங்களில் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணல் முடிவில் தற்போது தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் தெரிவுப் பட்டியல் tngasa.org என்ற இணையதளத்தில் இன்று (01.09.2025) வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது பயனர் குறியீடு (User id) மற்றும் கடவுச்சொல் (Password) வழியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்ட கல்லூரி மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 08.09.2025-க்குள் உரிய கல்லூரிகளில் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் இணைய வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.