பெற்றோரை இழந்து அரசின் உதவியை எதிர்நோக்கிய குழந்தைகளிடம் தொலைபேசி மூலம் பேசி, ஆறுதல் கூறனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: பெற்றோரை இழந்து அரசின் உதவியை எதிர்நோக்கிய குழந்தைகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசி, ஆறுதல் கூறியதுடன் தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில், பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் வாழ்வைத் தொடர அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர். குழந்தைகளின் தாயார் வசந்தா 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கூலித் தொழிலாளியான தந்தை கமலக்கண்ணன், கல்லீரல் பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார்.
குடும்பச் சூழலால் மூத்த மகள் லாவண்யா முதலாம் ஆண்டுடன் பொறியியல் படிப்பை நிறுத்திவிட்டு, கோவையில் வேலை செய்கிறார். 10 மற்றும் 8ம் வகுப்புடன் ரீனா, ரீஷிகா இருவரும் படிப்பை நிறுத்திவிட்டனர். கடைசி மகன் அபினேஷ் மட்டும் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவருகிறார். தந்தை கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்ய, இறுதிச் சடங்கிற்கு கூட பணம் இல்லாததால் ஊர் மக்கள் ஒன்று கூடி பணம் திரட்டி, இறுதிச் சடங்கு செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை போனில் தொடர்புகொண்டு பேசினார்.
இது தொடர்பான முதல்வரின் சமூக வலைதள பதிவில்:
இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! இந்தச் செய்தியைக் காலையில் செய்திதாளில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.
நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை, அமைச்சர் எ.வ. வேலு அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிடமாடல் அரசு துணை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.