அம்பாசமுத்திரத்தில் அரசு வேளாண்மை கல்லூரி மீண்டும் தொடங்கப்படுமா?
*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அம்பை : அம்பாசமுத்திரத்தில் மீண்டும் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பியே உள்ளனர்.
இங்கு அனைத்து பருவங்களிலும் பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக நெல், வாழை கரும்பு, கத்தரிக்காய், மிளகாய், தக்காளி ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. மேலும் இங்குள்ள விவசாயிகள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அதிகமாக வளர்ப்பதால் பால் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அம்பை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், அப்போதைய சட்டப்பேரவை தலைவராகவும் இருந்த ஆவுடையப்பன் ஏற்பாட்டில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் வேளாண்மை கல்லூரி துவங்கி நடைபெற்று வந்தது, இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து பட்டம் பெற்றனர். பின்னர் 9ஆண்டுகள் மிகவும் சிறப்பாக இயங்கி வந்த வேளாண் கல்லூரி 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் திடீரென மூடப்பட்டது.
அம்பை வட்டாரம் முழுக்க, முழுக்க விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஏற்கனவே இயங்கி வந்த அரசு வேளாண்மை கல்லூரி திடீரென மூடப்பட்டதால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் மீண்டும் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்து வாக்காளர்களிடையே ஓட்டு சேகரிக்கின்றனர். ஆனால் இதுவரை மூடப்பட்ட அரசு வேளாண்மை கல்லூரி தொடங்கப்பட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும் இப்பகுதி கல்வியில் முன்னேற்றம் அடைந்து திகழ்கிறது. இருப்பினும் இங்குள்ள விவசாயிகளின் தங்கள் பிள்ளைகளை வேளாண்மை சார்ந்த படிப்புகளை படிக்க வைக்க தஞ்சை, கோவை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
விவசாய உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்கும் அம்பை வட்டாரத்தில் வேளாண்மை குறித்து படிப்பதற்கு தனியார் வேளாண் கல்லூரிகள் கூட இல்லாதது மிகவும் வருத்தத்திற்கு உரியது.மேலும் பூச்சி தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்படும்போது வெளி மாவட்ட ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு செய்கின்றனர்.
இங்கு அரசு வேளாண்மை கல்லூரி இருந்தால் ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் மூலம் பயிர்களின் பாதிப்புகள் குறித்து அறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்படும், மேலும் இங்குள்ள விவசாயிகள் நேரடியாக விவசாயம் குறித்து போதிய பயிற்சி பெற இந்தியாவில் உள்ள வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகளால் அழைத்து செல்லப்படுகின்றனர்.
எனவே அம்பை வட்டாரத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தில் மீண்டும் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்கினால் இப்பகுதி விவசாயிகளின் பிள்ளைகள் தவிர மற்ற தரப்பினர் பிள்ளைகளும் படிக்க முன் வருவார்கள், மேலும் மாணவர்களுடன், விவசாயிகளும் பயனடைவார்கள்.
இதன் மூலம் நெல்லை மாவட்டமும் அம்பை சுற்று வட்டார பகுதிகளும் முன்னேற்றம் அடையும். தற்போது இப்பகுதியில் அரசு வேளாண்மை கல்லூரி இல்லாததால், 12-ம் வகுப்பில் வேளாண்மை சம்பந்தமாக படிக்கும் மாணவர்கள் கூட வெளி மாவட்ட ஊர்களில் சென்று உயர்கல்வியில் வேளாண்மை படிக்க முடியாமல், இங்குள்ள கலை கல்லூரிகளில் ஏதாவது ஒரு படிப்பை படிக்க நேரிடுகிறது.
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக்கல்லூரிகள் எதுவும் இல்லாத நிலையில் இங்கிருந்த அரசு வேளாண்மை கல்லூரி திடீரென மூடப்பட்டது மக்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது.
எனவே அம்பாசமுத்திரம் மற்றும் நெல்லை மாவட்ட விவசாயிகள், மாணவர்களின் நலன் கருதி அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் மீண்டும் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.