கோபிக்காரர் ரூட்டை மாற்றியதால் வாடிப்போன தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களை அரசு உயர் அதிகாரிகள் சொந்த வேலைக்கு பயன்படுத்தியது தொடர்பாக ரகசிய விசாரணை நடக்கிறதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மான்செஸ்டர் மாவட்டம் மட்டுமல்லாது, பக்கத்துல இருக்கிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வர்றாங்க.. அதனால் எந்த நேரமும் மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி இருக்கும்.. இப்படி இருக்கும்போது, மருத்துவமனையில் பணியாற்றும் உயர்அதிகாரிகள் சிலர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர்களை தங்களோட சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்திருக்கு.. இதில் ஒரு அதிகாரி, ஒப்பந்த ஊழியர்களை அழைத்துக்கொண்டு போய் தன்னுடைய வீட்டிற்கு பெயின்ட் அடித்து கொடுக்க வற்புறுத்தினாராம்.. முதலில் மறுத்த ஊழியர்கள் வேற வழியில்லாம வீட்டிற்கு சென்று பெயின்ட் அடித்து கொடுத்தார்களாம்.. இதை அந்த அதிகாரிக்கு ஆகாத ஆட்கள் செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பரவவிட்டதால் இப்ப சிக்கல் ஆகிவிட்டதாம்.. இதே போல இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மற்றொரு அதிகாரி ஒப்பந்த ஊழியர் சூபர்வைசரை தன்னுடைய கார் டிரைவாக வேலைக்கு அமர்த்தி இருக்கிறாராம்.. அதோடு மட்டுமில்லாமல் அதிகாரி நடத்தி வருகிற ஸ்கேன் சென்டரில் வேலை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துகிறாராம்.. உயர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்காம்.. இது தொடர்பாக ரகசிய விசாரணை நடந்து இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வாகன சோதனையில் வாங்குன பணத்தை திருப்பிக் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டாங்களாமே போக்குவரத்து பிரிவு காக்கிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தலைநகரில் புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட செம்பியம் போக்குவரத்து பிரிவு காக்கிகள் ஒரு மாசத்துக்கு முன்னால இரவு நேரத்தில் ரோந்து சென்றாங்களாம்.. அப்போது மது போதையில் வந்தவங்களை சோதனை செய்திருக்காங்க.. அதில் ஒருவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கேட்டிருக்காங்க.. உடனே, அந்த நபர் தனக்கு தெரிந்த அரசு பணியில் உள்ள ஒரு அதிகாரியிடம் போன் செய்து கொடுத்துருக்காரு.. இதை கேட்டுட்டு சரி, நீங்க சொல்லிட்டீங்க.. அதனால, ஒரு மூவாயிரம் மட்டும் கொடுத்துட்டு போக சொல்லுங்க எனக் கூறினாங்களாம்.. அதன்படியே மூன்றாயிரம் ரூபாய் வாங்கிட்டு அனுப்பிட்டாங்களாம்.. இந்த விஷயம் உயர் அதிகாரிகளின் காதுக்கு போயிருக்கு.. மேலும் இதுமாதிரி வேறு ஒரு நபரிடம் ஐந்தாயிரம் ரூபாய் வாங்கி, அந்த விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டிருக்கு.. அப்புறம் அந்த பணத்தை வாங்கிய நபரிடமே திருப்பிக் கொடுத்திட்டாங்களாம்.. இதுவும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றிருக்கு.. தற்போது இரண்டு விஷயங்கள் குறித்தும் உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் விசாரணை நடந்துக்கிட்டு இருக்காம்.. இதனால் விரைவில் செம்பியம் போக்குவரத்து பிரிவில் காக்கிகள் மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொண்டர்கள் குழுவின் கூட்டத்தை கூட்டிய தேனிக்காரரிடம் தங்கள் கருத்துகளை பக்கம் பக்கமாக எழுதி கொடுத்தாங்களாமே நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் மூன்று முறை முதல்வராக இருந்த தேனிக்காரரை கரைவேட்டி கட்டமுடியாத இடத்திற்கு தள்ளிவிட்டவர் தான் தற்போதைய இலைக்கட்சி தலைவர்.. இதனால் செய்வதறியாமல் தவித்த நிலையில் தொண்டர்கள் மீட்பு குழுவை தொடங்கி நடத்திக் கிட்டிருக்காராம் தேனிக்காரர்.. இவரை பாதாளத்திற்கு தள்ளிவிட்ட மலராத கட்சியின் கூட்டணியில் இருந்தும் வெளியே வந்துட்டார் தேனிக்காரர்.. எந்த பக்கமும் செல்ல முடியாமல் எல்லா பக்கமும் தடுப்புகட்டையா கிடக்குதாம்.. இவருக்கு இடையில் ஆக்சிஜன் கொடுத்த கோபிக்காரரும் அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என கூறிக்கிட்டிருந்த நிலையில் அவரும் திடீரென ரூட்டை மாத்திட்டாராம்.. இந்த சோகத்திற்கிடையே தொண்டர்கள் குழுவின் மா.செ. கூட்டத்தை கூட்டியிருக்காரு.. மைக்கை பிடித்த தேனிக்காரரோ என்ன பேசுவதென்றே தெரியாம தவித்துபோனதுடன், அடுத்தது என்ன செய்யலாமுன்னு நிர்வாகிகளிடம் கேள்வியை திருப்பிவிட்டிருக்காரு.. அதோடு எல்லோரும் நான் என்ன நடவடிக்கை எடுத்தால் அரசியல் நம்ம பக்கம் வரும் என்ற கருத்துகளை உடனடியாக எனக்கு எழுதி தாங்கன்னு ஆர்வமாக கேட்டிருக்காரு.. அதோடு ஒவ்வொருவரிடமும் பேப்பரும் பேனாவையும் கொடுத்திருக்காரு.. தொண்டர்களாகிய நம்மிடம் கருத்துகளை கேட்டு அடுத்தகட்டத்துக்கு போகும் தலைவன் இந்த லோகத்தில் யாரும் இல்லை என்ற மனநெகிழ்ச்சியுடன் என்ன செய்யணுமுன்னு எழுதியிருக்காங்க.. சில மா.செ.க்கள் பரீட்சை எழுதுவது போல கூடுதல் பேப்பரை வாங்கி பக்கம் பக்கமாக எழுதி கொடுத்தாங்களாம்.. இதனை மேடையிலேயே படித்த தேனிக்காரரு, ரொம்பவே ஹேப்பியாக இருந்தாராம்.. சிலர் வரும் தேர்தலில் 234 தொகுதியிலும் நின்று நமது பலத்தை காட்டவேண்டும் என்றும், மலராத கட்சியை இனி நம்பவேண்டாம் எனவும் பல்வேறு ஐடியாக்களை சொல்லியிருந்தாங்களாம்.. ஆனால் தேனிக்காரர் மனமோ எப்படியாவது இலைக்கட்சியுடன் இணைந்து போவதாகத்தான் இருக்குதாம்.. ஆனால் கோபிக்காரர் தன்னை தன்னந்தனியாக விட்டுட்டு போனதால் அவரை பின்பற்றலாம் என்ற திட்டத்தோடு இருப்பதாக அவரை நாடிபிடித்து பார்த்த ஆதரவாளர்கள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியின் மலரும் ஆசையால் யூனியனில் ஆட்களை வளைக்கும் நடவடிக்கை தொடருதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரி யூனியனில் தேர்தல் அரசியல் விளையாட்டுகள் இப்போதே களைகட்டுகிறதாம்.. மலராத கட்சிக்கு மலரும் ஆசை வந்துவிட்டதால் ஆட்களை வளைக்கும் சித்து நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாம்.. ஏற்கனவே ஆதரவு தந்த சுயேச்சைகளை மலரில் போட்டியிடுமாறு அறிவுறுத்தி உள்ளதாம்.. இதற்கு சிலர் பச்சைக்கொடி காட்டி விட்டார்களாம்.. அந்த வகையில் ஆந்திராவை ஒட்டிய ஏனாம் பிராந்தியத்தில் பள்ளியானவர் மலரில் நிற்க தயாராகி வருகிறாராம்.. ஏற்கனவே அங்கு புல்லட்சாமி ஆதரவாளரான மல்லாடி தொடர்ந்து விஜயம் கண்டுள்ளதால் மீண்டும் நிற்க முடிவெடுத்துள்ளாராம்.. புல்லட்சாமி நிற்காவிடில் தான் இறங்குவேன் என ஆதரவுகளிடம் கூறிவரும் நிலையில், ஒரே கூட்டணியில் தொகுதியின் எதிரும், புதிரும் அங்கம் வகிப்பதால் இப்போதே மோதல் பூதாகரமாகி வருகிறதாம்.. இது ஒருபுறமிருக்க இலை கட்சியில் இருந்த பாஸ் என்பவரையும் சிவாயமானவர் மலராத கட்சிக்கு இழுத்து விட்டாராம்.. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பாஸின் அண்ணானவரோ இலையின் தலைமைப் பண்பை வகிப்பதால் கட்சியினரின் முணுமுணுப்புக்கு ஆளாகி உள்ளாராம்.. இதேபோல் மேலும் சிலரை வளைக்கும் நடவடிக்கை திரைமறைவில் நடக்கிறதாம்.. இதுபற்றிதான் யூனியன் முழுக்க பரவலாக பேச்சு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.