கூகுள் மேப் மூலம் ஓசூர் நகருக்குள் வந்த கனரக வாகனம்: வழி தெரியாமல் வந்த டேங்கர் லாரியால் மின்கம்பம் சேதம்
ஓசூர்: ஓசூரில் கனரக வாகனம் ஓட்டுநர் வழி தெரியாமல் கூகுள் மேப் மூலம் நகருக்குள் புகுந்து மின் கம்பத்தை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மேம்பாலம் பழுதானதால் கனரக வாகனங்கள் பாலத்தின் மீது செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் லாரி மற்றும் கனரக வாகனங்கள் வெளிவட்டச் சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது. இந்த நிலையில் மேட்டூரில் இருந்து மூன்று சிமெண்ட் கலவை டேங்கர் லாரி, கூகுள் மேப் மூலம் கர்நாடகாவிற்கு சென்றது.
அப்போது ஒரு டேங்கர் லாரி ராயக்கோட்டை சாலை வழியாக நகருக்குள் புகுந்து ஹோட்டலுக்கு செல்ல முயன்றபோது கேபிள் ஒயர் லாரியில் சிக்கி கொண்டது. மின் கம்பத்தையும் ஒயரையும் சேதப் படுத்திய லாரி சிறிது தூரம் சென்று நிறுத்தப்பட்டது. இதனால் மின் கம்பம் சேதமாகி சாய்ந்தது, இது குறித்து லாரி ஓட்டுநர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கூகுள் மேப்பை பார்த்து ஓட்டி வந்ததால் மின் ஒயர் இருந்தது கவனிக்கவில்லை என்று தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த மின் துறை அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தும் மின் கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.