கூகுள் மேப் செய்த வேலை....தேவாலய படிக்கட்டில் சிக்கிக் கொண்டது கார்
மூணாறு : மூணாறில், கூகுள் மேப் உதவியுடன் செல்ல நினைத்து தேவாலய படிக்கட்டில் கார் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 4 பேர், இரு தினங்களுக்கு முன் மூணாறுக்கு காரில் சுற்றுலா வந்துள்ளனர்.
இரவு எட்டு மணி அளவில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால், கூகுள் மேப் உதவியுடன் மாற்றுப் பாதையில் பயணிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து கூகுள் மேப் உதவியுடன் காரை, டிரைவர் இயக்கியுள்ளார். ஹைரேஞ்ச் மருத்துவமனை வழியாக சென்ற போது, மூணாறு மவுண்ட் கார்மல் தேவாலயத்தின் முன்பு வாகனம் நின்றுள்ளது.
தொடர்ந்து வாகனம் செல்லும் வழி முடிந்து படிக்கட்டுகள் மட்டுமே இருந்துள்ளது.இதனைக் கவனிக்காத டிரைவர், தொடர்ந்து காரை இயக்கியுள்ளார். இதனால் தேவாலயத்தின் படிக்கட்டுகள் வழியாக இறங்கிச் சென்ற கார், தேவாலய தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
படிக்கட்டில் சிக்கிக்கொண்டதால், இருபுறமும் காரின் கதவுகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். அப்பகுதியினர், காரின் ஜன்னல் வழியாக சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து கிரேன் உதவியுடன் கார் அங்கிருந்து மீட்கப்பட்டது.