குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை..!!
சென்னை: அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மைத்திரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை தயாரித்தது. இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த திரைப்படத்தில் இளமை இதோ இதோ, ஒத்தரூபாய் தாரேன், ஏன் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் தியாகராஜன் மற்றும் சரவணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில் அனுமதி இல்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்திலிருந்து நீக்கவும் ரூ.5 கோடி இழப்பீடு கோரி அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளதாக கூறியதாகவும் ஆனால் அந்த உரிமையாளர் யார் என்று பதில் தெரிவிக்கவில்லை என்று அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாடலின் படைப்பாளர் தான் தான் என்றும் தனது அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது என்பதால் படத்தில் பாடல்களை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன் பட தயாரிப்பு நிறுவனம் பதிப்புரிமை சட்டத்தை மீறியதாகவும் உரிய அனுமதி பெறவில்லை என்றும் நாட்டுப்புறப்பட்டு, சகலகலா வல்லவன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்து பயன்படுத்தப்பட்ட அந்த பாடல்களை பயன்படுத்தி உள்ளதாகவும் வாதிட்டார், இந்த பாடல்களுக்கான சிறப்பு உரிமை தன்னிடம் உள்ளதாக இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பட தயாரிப்பு நிறுவனம் வழங்கிய பதிலில் யாரிடம் இருந்து பதிப்புரிமை பெறப்பட்டது என்றும் குறிப்பிடவில்லை என்று வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி செந்தில் குமார் இந்த 3 பாடல்களையும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்படுத்தியதற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். இது குறித்து பட தயாரித்து நிறுவனம் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு அந்த விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.