ஒருநாள் இடைவெளிக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் அதிரடி பவுன் ரூ.79 ஆயிரத்தை தொட்டது
சென்னை: ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு தங்கம் விலை நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. பவுன் ரூ.79 ஆயிரத்தை தொட்டுள்ளதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கம் தொடங்கியது. அதுவும் தினம், தினம் வரலாற்று உச்சத்தையும் பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
அதாவது, கடந்த 29ம் தேதி மாலை ஒரு பவுன் ரூ.76,280 ஆகவும், 30ம் தேதி பவுன் ரூ.76,960 ஆகவும், செப்டம்பர் 1ம் தேதி பவுன் 77,640 ஆகவும், 2ம் தேதி ரூ.77,800 ஆகவும், 3ம் தேதி ரூ.78,440 என்றும் அடுத்தடுத்து புதிய உச்சத்தை தொட்டது. அதே நேரத்தில், தொடர்ச்சியாக பவுன் ரூ.4,000 வரை உயர்ந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,795க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.78,360க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.
நேற்று மீண்டும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,865க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.78,920க்கும் விற்பனையானது. இந்த விலை என்பது வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். இந்த அதிரடி விலை நகை வாங்குவோரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில், வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.137க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனையானது.