தங்கச் சுரங்கம் இடிந்த விபத்தில் நைஜீரியாவில் 100 பேர் மண்ணில் புதைந்து பலி: 15 தொழிலாளர்கள் சடலம் மீட்பு
அபுஜா: நைஜீரியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியா நாட்டின் ஜம்ஃபாரா மாகாணத்தில், சட்டவிரோத தங்கச் சுரங்கத் தொழில் பரவலாக நடைபெற்று வருகிறது.
இங்குள்ள தங்க வயல்களை ஆயுதம் ஏந்திய கும்பல்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி அடிக்கடி வன்முறைச் சம்பவங்களும், கொடிய விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த சட்டவிரோத சுரங்கங்களில், உள்ளூர் மக்கள் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அபாயகரமான முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்ஃபாரா மாகாணத்தில் உள்ள கடவுரி சுரங்கப் பகுதியில், நேற்று தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது, ஏராளமான உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்தனர். இந்த கோர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உயிர் தப்பியவர்களும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 15 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிலரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ஜம்ஃபாரா காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.