புதிய உச்சத்தை எட்டியது தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை கடந்தது: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.75ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. அந்த வகையில் சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஜூலை 23ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை எட்டி வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,960க்கு விற்றது. இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளான நேற்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,380க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,040க்கும் விற்றது. தங்கத்தின் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை கடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது என்று நகை வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.