தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; ஒரு பவுன் ரூ.75,200க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை தொட்டது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் 23ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,040 என்ற புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் ஒருவாரமாக தங்கம் விலை குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து 4ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,360க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 5ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு அதிரடியாக ரூ.600 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 960க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,380க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40க்கும் விற்பனையானது.
இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த மாதம் ஜூலை 23ம் தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40க்கு விற்பனை ஆனது தான் உச்சபட்ச விலையாக இருந்து வந்தது. நேற்றும் அதே விலையை தங்கம் தொட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை விலை உயர்ந்தது. இன்று காலையில் மட்டும் தங்கம் விலை கிராமிற்கு ரூ.20 அதிகரித்து ஒருகிராம் தங்கம் ரூ.9,400க்கும், பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.75, 200க்கும் விற்பனையானது. இந்த விலை என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் மூன்றாவது நாளாக இன்றும் அதிகரித்து காணப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.127க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை போட்டு போட்டு உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், ”கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர், இஸ்ரேல்-ஈரான் போர் மற்றும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதிப்பு போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அது உள்நாட்டு சந்தையிலும் எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது” என்றனர்.