தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.240 அதிகரித்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.480 உயர்வு
சென்னை; தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.240 அதிகரித்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணித்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து பதிவானது. அதன் பின்னர் விலை சற்று குறைந்திருந்தது. 27-ந்தேதியில் இருந்து மீண்டும் விலை எகிறத் தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிகரித்து, ஒரு பவுன் ரூ.86 ஆயிரம் என்ற உச்சத்தையும் தாண்டி விற்பனை ஆனது. அதனை தொடர்ந்து நேற்றும் விலை உயர்ந்து காணப்பட்டது. இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,120-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை பதிவு செய்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.2,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.