வார இறுதி நாளில் தங்கம் விலை அதிரடி உயர்வு பவுன் மீண்டும் ரூ.85 ஆயிரத்தை தாண்டியது: வரலாறு காணாத உச்சம் தொட்ட வெள்ளி விலை
சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று அதிரடியாக உயர்ந்து பவுன் மீண்டும் ரூ.85 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போட்டியாக வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சம் கண்டது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தங்கம் விலை கடந்த 23ம் தேதி ஒரு பவுன் ரூ.85,120க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு 24ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.84,800 ஆகவும், 25ம் தேதி பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.84,080 ஆகவும் விற்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.84,400க்கு விற்றது. இந்நிலையில் வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை சந்தித்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,640க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.85,120க்கும் விற்றது. தங்கத்திற்கு போட்டியாக நேற்று வெள்ளி விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.159க்கும், கிலோவுக்கு ரூ.6000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. தங்கம், வெள்ளி விலை போட்டி போட்டு உயர்ந்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், “தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு அடுத்தபடியாக வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி, தொழில் துறையிலும் வெள்ளியின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது” என்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.