தங்கம் விலை மேலும் அதிரடி மாற்றம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 உயர்ந்தது: வெள்ளி விலையும் எகிறியது
சென்னை: தங்கம் விலை மேலும் அதிரடியாக பவுனுக்கு ரூ.600 உயர்ந்தது. இதே போல வெள்ளி விலையும் நேற்று அதிகரித்து காணப்பட்டது. தங்கம் விலை கடந்த மாதம் 23ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,040 என்ற புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் ஒருவாரமாக தங்கம் விலை குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,295க்கும், பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,360க்கும் விற்பனையானது.
இந்தநிலையில் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமிற்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,370க்கும், பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 960க்கு விற்பனையானது. இதன் மூலம் தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை நேற்று உயர்ந்தது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.125க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.