தங்கம் விலை கிடு, கிடு உயர்வு ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,960 எகிறியது: வெள்ளியும் அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சம்
சென்னை: தங்கம் விலை நேற்று கிடு, கிடுவன பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்தது. இதே போல வெள்ளியும் அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சம் கண்டது. தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர் விலையேற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் தங்கம், வெள்ளி விலையில் காலை, மாலை என 2 தடவை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
அதுவும் தினம், தினம் அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அதே போல வெள்ளி விலை என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு கிடு,கிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.92,640க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ஒரு கிராம் ரூ.197க்கும், கிலோவுக்கு 7 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 97 ஆயிரத்தும் விற்பனையானது.
இந்த ஜெட் வேகம் விலை உயர்வு என்பது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து இருந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் கிடு, கிடு உயர்வை தான் சந்தித்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.245 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,825க்கும், பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து ஒரு பவுன் ரூ.94,600க்கும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும்.
இதே போல நேற்று காலையில் வெள்ளி விலையும் அதிரடி உயர்வை நோக்கி தான் பயணித்தது. வெள்ளி விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.206க்கும், கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, பார் வெள்ளி. 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. எப்போதும் தங்கம் விலை தான் அதிரடியாக ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும்.
வெள்ளி விலையில் எப்போதாவது தான் மாற்றம் இருந்து வரும். ஆனால், கடந்த 2 மாதமாக வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் முதலீடு அதிகரிப்பு, தொழில் துறையில் வெள்ளியின் தேவை அதிகரிப்பால் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.