வார இறுதி நாளிலும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 எகிறியது: வெள்ளியும் அதிரடி உயர்வை சந்தித்தது
சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்தது. வெள்ளி விலையும் அதிரடி உயர்வை சந்தித்தது. தங்கம் விலை கடந்த கடந்த செப்டம்பர் மாதம் முதல் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதே போல வெள்ளி விலையும் போட்டி போட்டு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம், வெள்ளி விலை காலை, மாலை என இரண்டு வேளையும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதே போல நேற்று முன்தினமும் தங்கம் விலை காலை, மாலை என உயர்வை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.110, பவுனுக்கு ரூ.880 குறைந்தது. மாலையில் கிராமுக்கு ரூ.60, பவுனுக்கு ரூ.480 அதிகரித்து இருந்தது. மொத்தத்தில் வியாழக்கிழமையுடன் ஓப்பிடும் போது, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50, பவுனுக்கு ரூ.400ம் குறைந்தது. ஒரு கிராம் ரூ.10,900க்கும், ஒரு பவுன் ரூ.87,200க்கும் விற்பனையானது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்து இருந்தது. கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.162க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் குறைந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் வாரம் இறுதி நாளான நேற்று தங்கம் விலை மேலும் அதிகரித்தது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.87,600க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் நேற்று அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் ரூ.165க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் உயந்த்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.