தங்கம் விலை ஜெட் வேகம்: பவுன் ரூ.81 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்
சென்னை: தங்கம் விலை மேலும் ஜெட் வேகத்தில் அதிகரித்து பவுன் ரூ.81 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் கண்டது. கடந்த 29ம் தேதி முதல் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை கண்டு வருகிறது. 29ம் தேதி ஒரு பவுன் ரூ.76,280 ஆகவும், 30ம் தேதி பவுன் ரூ.76,960 ஆகவும், செப்டம்பர் 1ம் தேதி பவுன் 77,640 ஆகவும், 2ம் தேதி ரூ.77,800 ஆகவும், 3ம் தேதி ரூ.78,440 என்றும் தங்கம் விலை உயர்ந்தது.
4ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.78,360க்கு விற்பனையானது. மறுநாளே மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. 5ம் தேதி தங்கம் விலை ரூ.78,920 ஆகவும், 6ம் தேதி ரூ.80,040 ஆகவும் உயர்ந்தது. 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்தால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது.
அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.9,970க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு பவுன் ரூ.79,760க்கும் விற்பனையானது. இந்த விலை குறைவு என்பது சிறிது மணி நேரம் கூட நீடிக்கவில்லை. மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,060க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.80480க்கு விற்பனையானது.
இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை கண்டது. இந்த ெஜட் வேகம் விலையேற்றம் இன்னும் குறைந்தபாடில்லை. நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை தான் சந்தித்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10150க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,200க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை இதற்கு முன்னர் அனைத்து புதிய உச்சத்தையும் முறியடித்து, புதிய வரலாற்று உச்சம் கண்டது.
இந்த ஜெட் வேக விலையேற்றம் திருமணம் மற்றும் விசேஷ தினங்களுக்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தோடு போட்டி போட்டு உயர்ந்த வெள்ளி விலையில் நேற்று மாற்றம் ஏதுவும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.140க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையானது.