கடந்த10 நாள்களில் ரூ.9,000 சரிவு: சென்னையில் தங்கம் விலை ரூ.90,000-க்கு கீழ் சென்றது
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.90,000-க்கு கீழ் சென்றது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. வழக்கமாக காலையில் மட்டும் தான் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்கும். ஆனால், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து காலை, மாலை என 2 தடவை உயர்ந்து வருகிறது. அதுவும் தினம், தினம் புதிய உச்சம் கண்டு வரலாற்று உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 17ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.97,600 என்ற இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தை எட்டியது.
அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்தது. இன்றைய தினம் சவரனுக்கு ரூ.1,200 அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.11,300க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு மேலும் ரூ.1,800 குறைந்து ரூ.88,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,075க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165 என்ற நிலையில் தற்போது விலையில் மாற்றம் இல்லை. கடந்த 10 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,000 குறைந்துள்ளது.