பவுன் ரூ.95 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு வாரத்திற்கு பின் குறைந்த வெள்ளி விலை
சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்து பவுன் ரூ.95 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு வெள்ளி விலை குறைந்தது. தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம், வெள்ளி விலை என்பது வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. அதுவும் காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 முறை அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.94,880க்கும் விற்றது. இதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.207க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து, பார் வெள்ளி 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.
இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்வையே சந்தித்தது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,900க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.95,200க்கும் விற்றது. இந்த விலை என்பது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம் என்ற நிலையை அடைந்தது. அதே நேரத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த வெள்ளி விலையில் நேற்று குறைந்தது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்தும், ஒரு கிராம் வெள்ளி ரூ.206க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சம் தொட்டு வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தீபாவளி வரை தங்கம் விலை உயர தான் அதிக வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.