வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.91 ஆயிரத்தை கடந்தது: விழிபிதுங்கும் நடுத்தர மக்கள்
சென்னை: வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது. ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்து பவுனுக்கு ரூ.91ஆயிரத்தை கடந்ததால் நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தினம் தினம் புதிய சாதனையை படைத்து வரும் தங்கம் விலை கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 46 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் பவுனுக்கு ரூ.32,400 அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் பவுனுக்கு ரூ.14,400 உயர்ந்துள்ளது.
இப்படி தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, லாபகரமானது என்று கருதி நகை வாங்குவோர் மட்டும் இன்றி முதலீட்டுக்காகவும் தங்கத்தை பலரும் விரும்பி வாங்குகிறார்கள். இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பு உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் கூறி வருகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் 8ம்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7000 ஆக இருந்தது, ஒரே ஆண்டில் ஒரு கிராமுக்கு ரூ.4000 வரை விலை உயர்ந்து இன்று கிராம் ரூ.11 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.
தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவு, டாலர் மதிப்பு சரிவு, அரசியல் நிலையற்ற தன்மை போன்றவை தங்கம் விலையை வேகம் குறையாமல், உச்சத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றன. தங்கம் வாங்குகிறார்களோ இல்லையோ, இன்றைய தங்கம் விலை குறித்து கவலைப்படாத மக்களே இருக்க மாட்டார்கள். இதுவரை ஒரு நாளில் ஒருவேளை மட்டும் உயர்ந்து வந்த தங்கம் விலை, இப்போது காலையும் மாலையும் இரண்டு வேளை உயர்ந்து மேலும் மிரட்சியை ஏற்படுத்துகிறது.
தங்கம் விலை கடந்த திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.1,400 உயர்ந்து ரூ.89,000க்கும், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.89,600க்கும் விற்றது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கத்தின் விலை நேற்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இரு முறை விலை உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.91,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து கிராம் ரூ.11,300க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கும் விற்பனையானது. இந்நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,385க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.91,080க்கும் விற்றது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதோடு ஐப்பசி மாதம் முகூர்த்த நாட்களில் சுப விசேஷங்கள் நடைபெறும். அதனால் தங்கம் விலை மேலும் உயரும் என்பது வணிக துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.75 ஆக கடும் வீழ்ச்சி கண்டிருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது, நடுத்தர மக்களுக்கு இனி தங்கம் வாங்குவது எட்டா கனியாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.