தங்கம் விலை மீண்டும் வரலாற்று உச்சம் பவுன் ரூ.77 ஆயிரத்தை நெருங்கியது: வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்
சென்னை: தங்கம் விலை நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.77 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 8ம் தேதி ஒரு பவுன் ரூ.75,760க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருந்து வருகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,760க்கு விற்பனையானது. இந்த விலை இதற்கு முன்னர் இருந்த அதிகபட்ச விலையை சமன் செய்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தங்கம் விலை நேற்று முன்தினம் மாலையில் 2வது முறையாக உயர்ந்தது. அதாவது, நேற்று முன்தினம் மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,535க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.76,280க்கு விற்பனையானது. இந்த விலை தங்கம் வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது.
இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை சந்தித்தது. நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,620க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.76 ஆயிரத்து 960க்கும் விற்பனையானது. தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,520 அதிகரித்துள்ளதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு பவுன் தங்கம் ரூ.77 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகைபிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதேபோல், வெள்ளியின் விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.134க்கும், கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனையானது.