தங்கம் விலை பவுனுக்கு ரூ.90 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது: பவுனுக்கு ரூ.560 குறைந்ததால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.90 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்த நிலையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்ததால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது. இதனால் நகைப் பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதே வேகத்தில் சென்றால், ஒரு பவுன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் சொன்னார்கள். இப்படி இருந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியது. உச்ச விலையைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, பின்னர் சரிவைச் சந்தித்தது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு பின் தங்கத்தின் விலை மெல்ல மெல்ல சரிந்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாகப் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், ஏற்ற இறக்கத்துடனேயே நீடித்து வந்தது. அதுவும், கடந்த 18ம்தேதியில் இருந்து விலை குறைந்தது. ராக்கெட் வேகத்தில் ஏறிய நிலையில், விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியது. கடந்த 1ம்தேதி முதல் உயர்ந்திருந்த விலை, நேற்று முன்தினம் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாகக் குறைந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250-க்கும், ஒரு பவுன் ரூ.90,000-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து விலை அதிகரித்த பின், மீண்டும் ரூ.90 ஆயிரத்திற்குக் குறைந்தது நகை வாங்குவோரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பவுனுக்கு ரூ.800 குறைந்ததால் மகிழ்ச்சியில் இருந்த நகைப்பிரியர்கள், நேற்றும் விலை மேலும் குறையுமா என ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை இன்ப அதிர்ச்சியாக்கும் விதமாக, நேற்று தங்கம் விலை சரிவைச் சந்தித்து. இந்நிலையில், புதன்கிழமையான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.90 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.