வார இறுதி நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது: வெள்ளி விலை மேலும் அதிகரிப்பு
சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்தது. வெள்ளி விலை நேற்று மேலும் அதிகரித்தது. தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. விலை ஏற்றம் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விலை உயர்வு என்பது நீடித்து வந்தது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் கடந்த 29ம் தேதி முதல் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை பதிவு செய்து வந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,920க்கும் விற்பனையானது.
இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். இந்த விலை உயர்வு திருமணம் மற்றும் விஷேச தினங்களுக்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அதே போல தங்கம் விலைக்கு போட்டியாக வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வந்தது. மேலும் தங்கம் விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் வாரம் இறுதி நாளான நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை திடீரென குறைந்தது.
அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.10,220க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு பவுன் ரூ.81,760க்கு விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலை நேற்று மேலும் அதிகரித்தது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.143க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.