தங்கம் விலை மீண்டும் மாற்றம் பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது: வெள்ளி வரலாற்று உச்சம் கண்டது
சென்னை: கடந்த மாதம் இறுதியில் இருந்து ஜெட் வேகத்தில் அதிகரித்தது. தினமும் வரலாற்று உச்சத்தையும் பதிவு செய்தது. கடந்த 22ம் தேதி பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து பவுன் ரூ.83,440க்கு விற்கப்பட்டது. மறுநாள் 23ம் தேதி பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து பவுன் ரூ.85,120க்கு விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை பதிவு செய்தது.
தொடர்ந்து 2 நாளில் மட்டும் தங்கம் விலை பவுன் ரூ.2,800 வரை உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி திடீரென பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.84,800க்கு விற்றது. 25ம் தேதி பவுனுக்கு ரூ.720 குறைந்து பவுன் ரூ.84,080க்கு விற்றது. நேற்று மீண்டும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து கிராம் ரூ.10,550க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து பவுன் ரூ.84,400க்கும் விற்றது.
தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை நேற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து கிராம் ரூ.153க்கும் கிலோவுக்கு 3 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது.