தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம் பவுன் ரூ.76 ஆயிரத்தை தாண்டியது: ஒரே நாளில் 2 முறை அதிரடி மாற்றம்; நகை வாங்குவோர் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை நேற்று காலை, மாலை என 2 முறை உயர்ந்தது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.76 ஆயிரத்தை தாண்டி புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. தொடர் விலையேற்றத்தால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலையில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,470க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,760க்கு விற்பனையானது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஒரே நாளில் 2வது முறையாக நேற்று மாலையும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9535க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.76,280க்கு விற்பனையானது.
இந்த விலை என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1040 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களில் பவுனுக்கு ரூ.1,840 அதிகரித்துள்ளதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே போல நேற்று வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.131 க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.