காலையில் அதிகரிப்பு, மாலையில் அதிரடி சரிவு தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை மாற்றம்: 91,200 ரூபாய்க்கு பவுன் விற்பனை
சென்னை: தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து உயர்வை சந்தித்து வந்தது. அதுவும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 தடவை மாற்றம் ஏற்பட்டு வரலாற்று உச்சம் கண்டது. கடந்த 22ம் தேதி தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.3680 வரை குறைந்து ஒரு பவுன் ரூ.92,320க்கு விற்பனையானது. இதே போல நேற்று முன்தினமும் தங்கம் விலை குறைந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.92,000க்கும் விற்றது.
இது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், நேற்று காலை மீண்டும் மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து கிராம் ரூ.11,540க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து பவுன் ரூ.92,320க்கும் விற்றது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலை குறைந்து வருகிறது. அந்த வகையில், நேற்று காலையில் வெள்ளி விலையும் குறைந்தது. நேற்று காலையில் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 171 ரூபாய்க்கும், கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில் நேற்று மாலையில் தங்கம், வெள்ளி விலையில் மேலும் மாற்றம் காணப்பட்டது. அதில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.11,400க்கும், பவுனுக்கு ரூ.1120 குறைந்து ஒரு பவுன் ரூ.91,200க்கும் விற்பனையானது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல நேற்று மாலையில் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.170க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்னும் தங்கம் விலை குறைய தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை காரணமாக டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. இன்னும் நான்கு, ஐந்து நாட்கள் தங்கம் விலை குறைய தான் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் நகை வாங்குவது நல்லது. 4, 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது” என்றார்.