தங்கம் விலையில் திடீர் மாற்றம்: காலையில் குறைந்து மாலையில் கூடியது; ரூ.87,600க்கு விற்பனை; வெள்ளி விலை புதிய உச்சம்
சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்தது. இது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கம் விலை கடந்த கடந்த செப்டம்பர் மாதம் முதல் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. மாத மாதம் தொடக்க நாளான நேற்று முன்தினமும் தங்கம் விலை உயர்வை தான் சந்தித்தது. காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240, மாலையில் ரூ.480 அதிகரித்து ஒரு பவுன் ரூ.87,600 என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. இதற்கிடையில் நேற்று காலையில் தங்கம் விலையில் திடீரென மாற்றம் காணப்பட்டது.
அதாவது, நேற்று காலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.10,880க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.87,040க்கும் விற்றது. இந்த விலை குறைவு என்பது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்திருந்தது. அதேநேரத்தில் நேற்று காலையில் வெள்ளி விலை உயர்ந்து காணப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.163க்கும், கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. இந்த விலை என்பது வெள்ளி விலை வரலாற்றில் புதிய உச்சமாகும்.
இதற்கிடையில் தங்கம், வெள்ளி விலையில் நேற்று மாலையில் மாற்றம் ஏற்பட்டு நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சியடைய செய்தது. அதாவது, நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.87,600க்கும் விற்கப்பட்டது. அதேபோல, மாலையில் வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.164க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. இதுவும் வெள்ளி விலையில் வரலாற்று உச்சம் என்ற நிலையை அடைந்தது.