தங்கம் தரையிறங்குமா?
கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி 25 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. பட்ஜெட் தாக்கலின்போது ஒரு பவுன் ரூ.62 ஆயிரத்துக்கு விற்பனையானது. பட்ஜெட்டில் அறிவித்த மறுநாள் மட்டும் குறைந்த தங்கம் விலை, அதன்பிறகு மளமளவென உயர்ந்து, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை தாண்டியும், ஒரு பவுன் ரூ.81 ஆயிரத்தை தாண்டியும் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களை மிரட்டி வருகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்த 25 சதவீத கூடுதல் வரி, கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக பங்குச்சந்தையில் பெரியளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், தங்கம் விலை மலையளவு உயர்ந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி ஒரு பவுன் ரூ.77 ஆயிரத்துக்கு விற்ற நிலையில், 10 நாட்களில் தற்போது புதிய உச்சம் தொட்டு ஒரு வாரத்தில் 4 ஆயிரத்தை தாண்டி விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை சேமித்தவர்கள் வாழ்க்கையில் இது உற்சாகத்தை தந்தாலும், அடுத்தடுத்த மாதங்களில் சுபமுகூர்த்த தினங்கள் அதிகளவு வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில், நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது என்பது, கனவாகப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது ஒருபுறமிருக்க அடுத்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலையானது 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வரும் தகவல்கள், மேலும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றன. காரணம், கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரித்துள்ளன.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு, கடந்த 10 ஆண்டுகளில் ரஷ்யாவின் நிதி கையிருப்பில் தங்கத்தின் சதவீதம் 8ல் இருந்து 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. சீன நாடும் தங்கத்தை தேவைக்கு அதிகளவு கையிருப்பில் வைத்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, 2026, ஜனவரி மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை உயர்வு மேலும் கடுமையாகவே வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். தங்கம் விலை உயர்வு குறைய வேண்டுமென்றால், சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைக்க வேண்டுமென்கின்றனர்.
கடந்த 2000ல் ஒரு பவுன் ரூ.3,520 என விற்ற தங்கம், 2010ல் ரூ.14,800, 2020ல் 38,920 என விற்பனையானது. 2025ல் நேற்றைய நிலவரப்படி தங்கம் ஒரு பவுன் ரூ.81 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படுகிறது. 2020 - 2025 என இந்த 5 ஆண்டுகளில் ஏற்றத்தை கவனிக்கும்போது, பொருளாதார சந்தையில் எந்தளவுக்கு தங்கத்தின் விலை அதிகரிக்கிறது என புரிய வரும். நகைகள் வீட்டில் பயன்படுத்தாமலே இருந்தாலும் கூட அது ஒரு மதிப்புமிக்க முதலீடுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரம் இந்தியா போன்ற நாடுகளில் சுபமுகூர்த்த தினங்களில் வழங்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கவுரவ அடையாளமாகவே தங்கம் பார்க்கப்படுகிறது. எனவே, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வது ஆபத்தானது. விலை கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்பதே ஒரு சராசரி குடிமகனின் விருப்பம்.