தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்
சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 5 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வருகிற 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஈக்காட்டுத்தாங்களில் உள்ள நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சியில் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவு இணைப்பான், விலை நிர்ணயிக்கும் முறை, ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும். மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள், தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
18 வயதிற்கு மேல் உள்ள குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் இதற்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவிற்கு www.editn.in அல்லது 9543773337 / 9360221280 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடர்புகொள்ளலாம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.