தங்கத்திற்கு மாற்றாக முதலீடு அதிகரிப்பு எதிரொலி; தமிழகத்தில் விற்றுத் தீர்ந்த வெள்ளி கட்டிகள்: கடைகளில் முன்பதிவு செய்தால் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்
சென்னை: தங்கத்துடன் போட்டி போட்டு வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. இதனால், வெள்ளி விலையில் முதலீடு என்பது அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வெள்ளி கட்டிகள் விற்று தீர்ந்துள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதுவும் தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது இருந்து வந்தது. இந்த விலை உயர்வு இந்த மாதமும் தொடர்கிறது.
அதுவும் வழக்கத்துக்கு மாறாக காலை, மாலை என இரண்டு வேளையும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, மாலை என இரண்டு வேளையும் பவுனுக்கு ரூ.1280 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 92 ஆயிரத்தை தொட்டது. இதே போல வெள்ளி விலையும் காலை, மாலை என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.190க்கும், கிலோவுக்கு ரூ.6 ஆயிரம் உயர்ந்தும், பார் வெள்ளி 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். இதனால் தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தங்கம் தான் வழக்கமாக உயர்ந்து வரும். ஆனால், தற்போது தங்கத்திற்கு இணையாக போட்டி போட்டு வெள்ளி விலையும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் வரலாற்று உச்சமாக பார்க்கப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஒரு பவுனுக்கு ரூ.14 ஆயிரத்து 360 வரை உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கிலோவுக்கு ரூ.54 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை போலவே, வெள்ளியும் ஒரு உலோகம் தான். ஆனாலும் தங்கத்தின் மதிப்பைவிட குறைவு தான்.
இருந்த போதிலும், வெள்ளியின் பயன்பாடுகள் பல்வேறு துறைகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. மின்னனு சாதனங்கள், விமான உற்பத்தி பாகங்கள், மின்சார வாகனங்கள், சூரிய மின்சார உற்பத்தி, மின் கடத்திகள் போன்ற பல பயன்பாடுகளுக்கு முக்கிய அச்சாரமாக உள்ளது. இந்த பயன்பாட்டுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதை கவனித்த உலக முதலீட்டாளர்களின் கவனம், தங்கத்தில் இருந்து வெள்ளியின் பக்கம் அதிகம் திரும்பியிருக்கிறது.
இதனால் அதிகளவில் வெள்ளியை வாங்கி கையிருப்பு வைக்க தொடங்கி உள்ளனர். பெருமுதலீட்டாளர்கள் மட்டுமல்ல, சிறு முதலீட்டாளர்களும் வெள்ளியில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இதன் காரணமாகவே அதன் விலை உயர்ந்து வருகிறது என வியாபாரிகளும், பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெள்ளியில் நகை, நாணயம், கட்டிகளில் முதலீடு செய்வது என்பது அதிகரித்து வருகிறது.
இது குறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், “உலக அளவில் வெள்ளியை அதிக அளவு பயன்படுத்தும் நாடு இந்தியா. இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்ய முடியாதவர்கள் வெள்ளியில் முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் வெள்ளி கட்டிகள் விற்று தீர்ந்துள்ளது. சென்னை மற்றும் பிறமாவட்டங்களை சார்ந்த நகைக்கடைகள், வியாபாரிகளிடம் வெள்ளி கட்டிகள் இருப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் வெள்ளிக்கு கட்டுப்பாடு உள்ளதால் வாடிக்கையாளர்கள் வெள்ளி கட்டி வாங்க புக் செய்தால் 10 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 15, 20 நாட்களாக வெள்ளிக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வெள்ளி கட்டி வாங்க முன்பதிவு செய்து இருந்தாலும் விற்பனை செய்யப்படும் அன்று என்ன விலைக்கு விற்கிறதோ அந்த விலைக்கு தான் வெள்ளி விற்பனை செய்யப்படும்” என்றனர்.
* பெருமுதலீட்டாளர்கள் மட்டுமல்ல, சிறு முதலீட்டாளர்களும் வெள்ளியில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இதன் காரணமாகவே அதன் விலை உயர்ந்து வருகிறது