தீபாவளி நெருங்கி வரும் வேளையில் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: ஒரே நாளில் 2 முறை விலையேற்றதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
சென்னை: வார தொடக்க நாளான நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று காலையில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,525க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் 92,200க்கும் விற்பனையானது. நேற்று காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.195க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று மாலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,580க்கும், பவுனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.92,640க்கும் விற்கப்பட்டது.
இதே போல நேற்று மாலை வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.197க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 97 ஆயிரத்தும் விற்பனையானது. வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி சமயத்தில் நிறைய பேர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.