விமான நிலைய ஊழியர்கள் உதவியுடன் கடத்தல்; ரூ.12.5 கோடி தங்கம் பறிமுதல்; 13 பேர் கைது: மும்பையில் அதிகாரிகள் அதிரடி
மும்பை: மும்பை விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், ‘ஆபரேஷன் கோல்டன் ஸ்வீப்’ என்ற பெயரில் வருவாய் புலனாய்வு இயக்குநரக (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையின் முடிவில், சுமார் 12 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10.5 கிலோகிராம் 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறு இலங்கையர்கள், இரண்டு வங்கதேசத்தினர், இரண்டு விமான நிலைய ஊழியர்கள், கடத்தலுக்கு உதவிய இரண்டு பேர் மற்றும் கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட ஒருவர் அடங்குவர். இந்தக் கடத்தல் கும்பல், துபாயில் இருந்து மற்ற சர்வதேச இடங்களுக்குச் செல்லும் பயணிகளை கடத்தல் குருவிகளாகப் பயன்படுத்தியுள்ளது. பயணிகளின் உடலில் மறைத்து எடுத்து வரப்படும் தங்கம், சர்வதேச புறப்பாடு பகுதியில் உள்ள சில ஊழல் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பின்னர், அந்த ஊழியர்கள் தங்கத்தை விமான நிலையத்திற்கு வெளியே கடத்தி, மும்பை மற்றும் துபாயில் உள்ள கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளிகளிடம் ஒப்படைத்துள்ளனர். விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில், குற்ற அமைப்புகளுக்கு உள் ஆட்களே உதவி செய்வது பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் உள்ள சர்வதேச தொடர்புகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.