தொடரும் விலை உயர்வு.. நாடு முழுவதும் தங்கத்தின் விற்பனை கடும் வீழ்ச்சி: 14 காரட் தங்க நகைகள் மீது திரும்பும் பெண்களின் கவனம்..!!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மேல்நோக்கி உயர்ந்து வருவதால் கடந்த ஜூன் மாதத்தில் தங்கம் விற்பனை 60% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது பெருந்தொற்று காலத்துக்கு பிறகு தங்கம் விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவு என்கிறார்கள் வர்த்தகர்கள். அமெரிக்கா அதிபர் டொனல்டு டிரம்பின் இறக்குமதி வரி விதிப்பின் எதிரொலியாக ஏற்பட்டுள்ள வர்த்தக பதற்றத்தால் சர்வதேச சந்தையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது அவுன்ஸ் 3,400 டாலரை நெருங்கியுள்ளது. இதனால் மதிப்புமிகு மஞ்சள் உலோகத்தின் விலை உலகம் முழுவதும் பெரும்பாலும் உச்சத்தை நோக்கியே பயணித்து வருகிறது.
ஒருநாள் சில நூறு ரூபாய் குறைந்தால் அடுத்தடுத்த நாட்களில் ஆயிரத்தில் உயருகிறது தங்கம் விலை. வெள்ளி கிழமை நிலவரப்படி, ஒரு சவரன் 23 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.72,800யை தாண்டியுள்ளது. சில்லறை விற்பனையில் 3 விழுக்காடு ஜிஎஸ்டி-யை சேர்த்தால் வாடிக்கையாளர்கள் ஒரு சவரன் நகை வாங்க சுமார் ரூ.75,000 செலவிடும் நிலை உள்ளது. இந்த உச்சம் 22 காரட் மீதான மக்களின் ஈர்ப்பினை குறைக்க தொடங்கியுள்ளது. இதனால் 2025 ஜூன் மாதத்தில் தங்கத்தின் விற்பனை சரிந்துள்ளதாக இந்திய தங்கம் மற்றும் நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் தங்கத்தின் ஒட்டுமொத்த விற்பனை கடந்த ஜூனில் 60% சரிவை கண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்களை கவர வர்த்தகர்கள் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்தாலும் தங்கம் விற்பனை பெரிய அளவில் உயரவில்லை என்றும் கூறுகின்றனர். இந்த நெருக்கடியை சமாளிக்க 14 காரட் தங்க நகைகளை நகை வர்த்தகர்கள் தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகின்றனர். 22 காரட் தங்கத்தை விட குறைந்த விலையை கொண்டு இருப்பதால் 14 காரட் தங்க நகைகள் பெண்களின் விருப்ப தேர்வாக மாறிவருகின்றன. நிலையற்ற உலகளாவிய வர்த்தக ஆபாய எதிரொலியாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனத்தை திருப்பி வருவதாக கூறும் வர்த்தகர்கள் தங்கத்தின் விலை உயர்வுக்கு இதுவே முக்கிய கரணம் என்கின்றனர்.