தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகம்; கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது: போட்டிபோட்டு வெள்ளியும் வரலாற்று உச்சம் தொட்டது
சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 8ம் தேதி ஒரு பவுன் ரூ.75,760 என்ற புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் தினம், தினம் புதிய வரலாற்று உச்சத்தையும் பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 29ம் தேதி காலையில் ஒரு பவுன் ரூ.75,760க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை சமன் செய்தது. அன்று மாலையில் மேலும் விலை அதிகரித்து ஒரு பவுன் ரூ.76,280க்கு விற்பனையாகி புதிய உச்சம் கண்டது. தொடர்ந்து 30ம் தேதி மேலும் அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.76 ஆயிரத்து 960க்கு விற்பனையாகி இதற்கு முன்னர் இருந்த புதிய உச்சத்தை முறியடித்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், வாரத்தின் தொடக்க நாளான நேற்றும் தங்கத்தின் விலை அதிரடி உயர்வை தான் சந்தித்தது. அதாவது, நேற்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.77,640க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை வரலாற்று புதிய உச்சத்தையும் பதிவு செய்தது. அதே நேரத்தில் ஒரு வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.3,200 உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல, தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.136க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதன் மூலம் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது.
அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கம் தங்கம், வெள்ளி வர்த்தகத்திலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.